×

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதம் புதிய வருமான வரி முறையால் மக்கள் கையில் கூடுதல் பணம்: நிதி அமைச்சர் பதில்

புதுடெல்லி: ‘புதிய வருமான வரி விதிப்பு முறையால், வரி பிடித்தம் போக அதிக பணம் மக்கள் கையில் கிடைக்கும்’ என மக்களவையில் பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நடுத்தர வர்க்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், வேளாண் துறை, கிராமப்புற மக்கள், சுகாதாரம், பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.

குறிப்பாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி விதிப்பு முறை மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. ஏனெனில், மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.50 ஆயிரம் நிலையான விலக்கும் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் பயனடைவார்கள். வரி பிடித்தம் போக, மக்களின் கைகளுக்கு அதிக பணம் கிடைக்கப் பெறும். இது மிக மிக சீரான நுட்பமான பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார்.

* அதானிக்காக பசுமை பட்ஜெட்?
அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல் பசுமை ஹைட்ரஜன் வரை பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் பட்ஜெட்டில் சுத்தமான மாற்று எரிசக்திக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘குறிப்பிட்ட சிலருக்கு கடன் தருவதற்காக வங்கிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தது முந்தைய ஆட்சிக் காலம். இந்த ஆட்சியில் யாரையும் குறிப்பிட்டு யாரையும் மனதில் வைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. அனைவரையும் ஒட்டுமொத்த நாட்டையும் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன’’ என காங்கிரசை மறைமுகமாக சாடினார்.


Tags : Parliament ,Finance , Budget Debate in Parliament New Income Tax System More Money in People's Hands: Finance Minister Answers
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...